சென்னை: பணி நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, 8 ஆண்டுகளாக போராடி வந்த ஆசிரியையின் நியமனத்துக்கு தற்காலிக ஒப்புதல் வழங்கி நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாகை மாவட்டம் ஆயக்காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட வெண்ணிலா என்பவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, 8 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அதன் பின்னரும் அவர் ஒப்புதல் அளிக்காததால், மாவட்டக் கல்வி அலுவலருக்கு எதிராக மூன்று முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், 2016ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கல்வித்துறை செயலாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:தெர்மாகோலில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்.. மகாராஷ்டிராவில் அவலம்!
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 7 ஆண்டுகளுக்கு பிறகு மறுபரிசீலனை மனு தாக்கல் செய்திருப்பதாக கூறி, 500 ரூபாய் அபராதத்துடன் தமிழநாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஆசிரியை வெண்ணிலா தொடர்ந்த அவமதிப்பு வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு மீண்டும் இன்று (ஆகஸ்ட் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது நாகப்பட்டினம் மாவட்ட தொடக்கல்வி அலுவலர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், 2015ஆம் ஆண்டு முதல் வெண்ணிலாவின் பணி நியமனத்துக்கு தற்காலிக ஒப்புதல் அளிப்பதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், இந்த தற்காலிக ஒப்புதல் என்பது அந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஆசிரியை வெண்ணிலா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:8000 செவிலியர்களுக்கு தகுதி இருந்தும் நிரந்தரம் செய்யப்படாதது ஏன்? - கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!