கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்த பின்பு, தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் தொழிற்பேட்டைகளை இயங்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சென்னையில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், சில தளர்வுகளுடன் கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள 17 தொழிற்பேட்டைகள் மே 25ஆம் தேதி முதல் இயங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 17 தொழிற்பேட்டைகள் 25 விழுக்காடு தொழிலாளர்களுடன் செயல்பட வேண்டும் எனவும், 55 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், கரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை அனுமதிக்கக் கூடாது எனவும், பணியாளர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்தல், முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.