சென்னை: உலக கிரிக்கெட் ரசிகர்கள், மிகவும் எதிர்ப்பார்த்த, 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ஆம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பையின் இறுதி போட்டியானது நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தொடரின் போட்டிகள் இந்தியாவின் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வரும் 23ஆம் தேதி (திங்கள்கிழமை) அன்று நடைபெற உள்ள 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை சென்னையில் சந்தித்து உள்ளார். விளம்பர பட சூட்டிங்கிற்காக சென்னையில் கடந்த சில நாட்களாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி முகாமிட்டு உள்ளார்.