பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளி ஒருவர் தனது மனக்குமுறலை பதிவாக வெளியிட்டுள்ளார். அதில், அம்மாவின் ஆட்சி என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்கும் தமிழ்நாடு அரசே! முதலமைச்சரே! போக்குவரத்து கழகத்தில் பணியில் சேர்ந்து தமிழ்நாட்டில் உள்ள நகரங்களையும், கிராமங்களையும் இணைத்து சமூக,பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக செயல்பட்டு, எங்களின் ரத்தமும், வியர்வையும் சிந்தி கைகால்கள் இழந்து , உயிரை இழந்து பாடுபட்டதை தவிர என்ன தவறு செய்தோம்.
ஆண்டு தோறும் டெல்லி சென்று விருதுகளை வாங்கி வரும்போதும், சாதனைகளாக தம்பட்டம் அடிக்கும்போதும் இந்த பெருமைகளுக்கு காரணமான எங்கள் தொழிலாளர்களின் கடும் உழைப்பு தெரியவில்லையா? உங்கள் ஆளுகையில் உள்ள இதர பொதுத்துறை ஊழியர்களுக்கு வெண்ணெயும், எங்களுக்கு சுண்ணாம்பும் தருவதுதான் தர்மமா? நீங்களே பால் விலை, பருப்பு விலை, கேஸ் சிலிண்டர் விலை, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து விலைகளையும் உயர்த்திவிட்டு எங்கள் DA.வை மட்டும் 53 மாதங்களாக உயர்த்தாமல் வதைப்பது ஏன்?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் முதல் இதுவரை அசையாமல் இருக்கும் DA உயர்வு கேட்டு போராடினோம்,மனு கொடுத்தோம், சட்டமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து முறையிட்டோம், பேச்சுவார்த்தைகளில் உத்தரவாதம் அளித்தீர்களே! போக்குவரத்து துறை செயலாளர் எழுத்துப்பூர்வ உறுதிமொழி கொடுத்தாரே? இதற்கெல்லாம் இதுதான் நிலையா? நொந்து போய் நீதிமன்றத்தில் முறையிட்டோம் அங்கு வந்தும் குழி பறிக்க துடிக்கும் வண்ணம் செயல்படுவதுதான் தாயுள்ளம் கொண்டோரின் தயாள குணமா? நீங்கள் பெருமை பீற்றிக்கொள்ள நாங்கள் குடும்பத்தை, குழந்தைகளை மறந்து, சுக துக்கத்தை இழந்தோம்!உடல் நலனை இழந்தோம்! உற்றார் உறவினர் நண்பர்கள் நட்பை இழந்தோம்! இனியும் இழப்பதற்கு எங்களிடம் உயிரைத் தவிர எதுவும் இல்லை.
இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? எத்தனை பேர் சாக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நீதியரசர்களே சட்டத்தை காக்க வேண்டிய நீங்களே சட்ட மீறல்கள் செய்யும் போக்குவரத்து நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? உழைத்து உருக்குலைந்து ஓடாய் போன வயது முதிர்ந்த எங்கள் பிரச்னைகள் மீதான வழக்குகளில் மீண்டும், மீண்டும் வாய்தா வழங்குவது எந்த சட்டத்தின் அடிப்படையில் என்று எங்களுக்கு புரியவில்லை? உங்கள் இதயத்தின் ஒரு மூலையில் எங்கள் கொடுமைகளுக்கு முடிவு காண சிறிது இடம் தாருங்கள். ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக நடை பிணங்களில் ஒருவன்' எனத் தெரிவித்துள்ளார்.