சென்னை:இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கான முக்கிய விமான பாகங்களை தயாரித்து வழங்க, சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கான ஒப்பந்த உத்தரவை போயிங் இந்தியா நிறுவனத்தின் விநியோக மேலாண்மை இயக்குநர் அஸ்வனி பார்கவா வழங்க, ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.சுந்தரம் பெற்றுக்கொண்டார்.
சேலத்தில் அமைந்துள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கு நீண்ட கால ஒப்பந்தத்தை போயிங் இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தரம், துல்லியம் மற்றும் கூட்டு கலாச்சாரத்தின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும்.
சேலம், ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்திலுள்ள வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும்.
ஏரோஸ்பேஸின் படிப்படியான வளர்ச்சி
ஏரோஸ்பேஸ் நிறுவனம் 1988ஆம் ஆண்டு ஒரு குறுந்தொழில் நிறுவனமாகத் தொடங்கப்பட்டு. படிப்படியாக வளர்ந்து சிறு நிறுவனமாகவும், தற்போது நடுத்தர நிறுவனமாகவும் உயர்ந்துள்ளது.