சென்னை:தமிழக காங்கிரஸ் தலைவர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியவர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும் ஆகஸ்ட் 4ம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் ஆலோசனையைத் தொடங்கி உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தைச் சார்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கெடுக்க உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில முன்னாள் தலைவர்கள், 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் , 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வியூகத்தை எவ்வாறு அமைப்பது குறித்தும் மக்களை எந்த முறையில் முழுவதுமாக அணுகுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தவரை மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த 40 தொகுதிகளிலும் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்றால், மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். தற்போது இருக்கும் சுழலில் ராகுல் காந்தியால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருக்கிறது. அதனால் யார் பிரதமராக இருக்கக்கூடும் என்றும்; கோஷ்டி மோதலும் காங்கிரஸ் கட்சிக்குள் வரும். இந்த கோஷ்டி மோதலை தவிர்க்க தான் இந்த ஆலோசனைக் கூட்டம் எனவும் ஒரு தரப்பு கூறுகிறது.
இதையும் படிங்க:Parliament adjourned : 10வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!
எதற்காக கூட்டம்:தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளைக் கேட்பதும், தமிழக பா.ஜ.கவின் தேர்தல் அணுகுமுறையை எவ்வாறு சமாளிப்பதும், தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழல் என்ன, அதிமுக - பாஜக கூட்டணியின் பலம் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கையாண்ட முறை குறித்தும் அந்த முறை தமிழக அரசியல் களத்திற்கு பொருந்துமா என்பது குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி தமிழகத்திற்கு புதிய காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்படும் என்று பல தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.