சென்னை:சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் மற்றும் தினசரி நாளிதழ்களில் பணிபுரிபவர்களுக்கான மருத்துவ முகாமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் இன்று (டிச.21) துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தினசரி நாளிதழ்கள், செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் பருவ இதழ்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.
இது அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து செய்யப்படுகிறது. மருத்துவ முகாமில் செய்யப்படும் பரிசோதனைகள் குறித்த பதிவேடும் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு மேல் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டது. மிக கனமழை பொழிந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், மழைப்பொழிவு தொடங்கியவுடன், பெரிய அளவில் நீர் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்து வருகிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், மருத்துவத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். தூத்துக்குடி மருத்துவமனை தாழ்வான பகுதியில் இருந்ததால், உடனடியாக அதற்குள் நீர் வரத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மின்சார துண்டிப்பும் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை பிரிவில் 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருந்தனர். எனவே, அந்த சூழ்நிலையைs சமாளிப்பதற்காக மருத்துவக்கல்வி இயக்குனரை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தோம். பின்னர், டீசல் மூலம் ஜெனரேட்டர் இயக்கி, மின்சார வசதி கொடுக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிய அளவில் தண்ணீர் தேங்கிய உடன், நீரை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு, அங்குள்ள நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டது.