தமிழ்நாடு முழுவதும் வருகிற 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது எந்த வித அசாம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 65 இந்து அமைப்புகளுடன் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் ஆணையர்களான பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் அன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய இந்து சத்ய சேனா நிர்வாகி வசந்த குமார், கடந்த 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளின் படி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என காவல்துறை கூறியதாகவும் அதற்கு நாங்கள் கடைப்பிடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் மத நல்லிணத்துக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் விநாயகர் சதூர்த்தியை கொண்டாடுவதற்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி இருப்பதாக அவர் கூறினார். மேலும் மின்சார வாரியத்தில் முன்பணமாக 7000 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலுத்திவிட்டு சிலைகளை வைத்து வருவதாகவும், மின்சார வாரியத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு கட்டிய முன்பணம் இன்னும் தங்களுக்கு தரவில்லை என குற்றஞ்சாட்டினார். இந்த முறையும் அந்த தவறு நடக்காமல் இருக்க வழிவகை செய்து, பணத்தை உடனடியாக திருப்பி தரவேண்டும் என கோரிக்கை வைத்தார்.