தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அயோத்திக்கு கிடைத்த பரதனைப்போல் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஓபிஎஸ் - அதிமுகவில் வெடிக்கும் சர்ச்சை - Power competition between OBS-EPS

சென்னை: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், தன்னை 'பரதன்' போல என்று பெருமையாக சுட்டிக்காட்டிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வார்த்தைகளை எடுத்துக்கூறி நாளிதழில் விளம்பரப்படுத்தியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அயோத்திக்கு கிடைத்த பரதனைப்போல் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஓபிஎஸ் - அதிமுகவில் வெடிக்கும் சர்ச்சை
அயோத்திக்கு கிடைத்த பரதனைப்போல் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஓபிஎஸ் - அதிமுகவில் வெடிக்கும் சர்ச்சை

By

Published : Feb 15, 2021, 11:19 AM IST

Updated : Feb 15, 2021, 12:32 PM IST

நேற்று (பிப்.14) நாளேடு ஒன்றில் இடம்பெற்ற விளம்பரம் அதிமுகவுக்குள் வெடிக்கும் சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாய் அமைந்துள்ளது.

அதில், "அயோத்திக்கு கிடைத்த பரதனைப்போல் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஓபிஎஸ்' என்று விளம்பரம் வெளியாகியிருக்கிறது. பிப்ரவரி 24, 2002ஆம் ஆண்டு அன்று, ஜெயலலிதா "ஓபிஎஸ் போன்ற ஒருவரை தொண்டனாக பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம்" என நினைவு கூர்ந்தது, அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது.

"ஓ. பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பு வகித்த இந்த ஐந்து மாத காலத்தில் மிகுந்த பொறுப்புடனும் கடமை உணர்வுடனும் நடந்து கொண்டிருக்கிறார். எல்லோரும் பாராட்டும் வகையில் செயல்பட்டிருக்கிறார்" என்று ஓ.பன்னீர்செல்வம் குறித்து ஜெயலலிதாவின் வார்த்தைகள் இந்த விளம்பரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

மேலும், 'ஒருவருக்கு முதலமைச்சர் அரியாசனத்தை வழங்கிவிட்டு மீண்டும் அது திரும்பப் பெறப்பட்டதாக வரலாறே இல்லை: அந்த புதிய வரலாற்றை படைத்துக் காட்டியவர் அன்புச் சகோதரர் திரு. ஓ.பன்னீர் செல்வம்', என்று ஜெயலலிதா தன்னை புகழ்ந்ததாகவும் ஓபிஎஸ் விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஒரு பக்கம் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் வரவேற்றாலும், இது முதலமைச்சர் எடப்பாடி.கே. பழனிசாமியின் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு நாளிதழில் ஓபிஎஸ் வெளியிட்டிருந்த விளம்பரத்தில், விசுவாசத்தில் "நிகழ்கால பரதன்" எனக் குறிப்பிட்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றபோது பாராட்டியதை சுட்டிக்காட்டி விளம்பரம் செய்தார்.

அயோத்திக்கு கிடைத்த பரதனைப்போல் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஓபிஎஸ்

மேலும், "மும்முடிச் சோழன்" எனக் கூறி தான் முதலமைச்சராக இருந்த வரலாற்றையும் ஓபிஎஸ் அதில் கூறியுள்ளார். 2001ஆம் ஆண்டில் முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்கிறார், ஓபிஎஸ். அதற்குப் பின்னர் 13 ஆண்டுகள் கழித்து 2014ஆம் ஆண்டு அதே பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

ஒரு பக்கம், ஈபிஎஸ் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்த மாற்று நிலை அவர் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை விரும்புகிறார். எனவேதான், ராமாயணத்தில் வரும் பரதனின் கதாபாத்திரத்தை ஒப்பிட்டு தொடர்ந்து விளம்பரம் அளித்து வருகிறார் என்பது அரசியல் நோக்கர்களின் பார்வை.

ஈபிஎஸ்ஸுக்கு இன்று ஓபிஎஸ் மறைமுகமான குடைச்சலைக் கொடுத்து கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும், இன்றைய அரசியல் சூழ்நிலையில், சசிகலாதான் ஈபிஎஸ்ஸின் எதிரியாகப் பார்க்கப்படுகிறார். ஆனால் இது உண்மையல்ல, ஓபிஎஸ் தான் மறைமுக எதிரி என்கின்றனர்.

அதிமுகவில், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் அவர் நினைத்ததை செய்யமுடியவில்லை. இது ஈபிஎஸ்ஸின் செல்வாக்கை கட்சிக்குள்ளும் தெளிவாக காட்டுகிறது என்று கூறிய அரசியல் நோக்கர்கள், ஓபிஎஸ் வேறு வழியின்றி இந்த மாதிரியான விளம்பரங்களை கையில் எடுத்து அவரது பலத்தை காட்டத் தொடங்கியுள்ளார். எனினும், இதற்கு சமமாக, ஈபிஎஸ் தனது விளம்பர யுக்தியை தொலைக்காட்சி மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் கேள்விக்கு தொலைபேசி மூலம் பதிலளித்த, அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், "கட்சியில் பிளவு இல்லை. அரசின் விளம்பரங்கள் முதலமைச்சர் மூலமாக வெளியிடப்படுகிறது. கட்சியின் விளம்பரத்தை துணை முதலமைச்சர் வெளியிடுகிறார். அம்மாவின் ஆட்சியை நினைவுகூர அவர் இந்த விளம்பர யுக்தியை எடுத்திருக்கலாம். மற்றபடி, அதிமுகவில் எல்லோரும் ஒன்றாகத்தான் உள்ளோம்" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

அரசியல் ஆய்வாளர் அ. மார்க்ஸ், "அதிமுவில் ஒற்றுமை இல்லை என்பதை இது தெளிவாக காட்டுகிறது. மேலும், யார் யாரை விழுங்குவது என்ற நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. இதை பாஜக வேடிக்கை பார்க்கிறது. கடந்த நான்கு ஆண்டு கால ஈபிஎஸ்ஸின் ஆட்சி மக்களுக்குப் பிடித்ததே என்று சொல்லலாம். ஏனெனில், அவர் ஓபிஎஸ்ஸைப் போல குடும்ப அரசியலில் ஈடுபடவில்லை" என்று சொன்ன அவர், ஓபிஎஸ்ஸின் அணி மறைமுகமாக சசிகலா அணியில் இணைந்திருக்கிறது என்று சூசகமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து வரும் இந்த விளம்பரங்களினால், ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை முதலமைச்சராக ஏற்கும் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா எனத் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’வேலைவாய்ப்பு, தொழில் முதலீடுகள் இல்லாமல் தமிழ்நாடு எவ்வாறு வெற்றி நடைபோடும்’: கனிமொழி கேள்வி

Last Updated : Feb 15, 2021, 12:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details