தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி பதவி ஏற்றார். உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 2016 டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். தொடர்ந்து அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆளுநர் வித்யாசாகர்ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக பொதுக்குழுவால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா உயிரிழந்துவிட்ட நிலையில், இரண்டாவது குற்றவாளியான சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார்.
அப்போது கட்சியில் தனக்கு விசுவாசமாக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்தார். அதன் பின்னர் 2017ஆம் ஆண்டு பிப்பவரி மாதம் 16ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர், நிதித்துறை அமைச்சராகவும் 2017 ஆகஸ்ட் 21ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் பரப்புரையில் ஈடுப்படாமல் அமைதி காத்து வருகிறார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாராக இருந்த சசிகலா நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சிறை வாசம் முடிந்து நாளை (பிப்.8) தமிழ்நாடு வருகிறார். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகிகள் பலர் சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.