சென்னை: ஒன்றிய அரசின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை (DPIIT), பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வணிகம் புரிதலை எளிதாக்குதல் (Ease of Doing Business) தொடர்பாக அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் தர வரிசைப் படுத்தும் நடைமுறையை பல வருடங்களாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நடைமுறையில், மாநிலங்கள்:
1) சிறந்த சாதனையாளர்கள் (Top Achievers),
2) சாதனையாளர்கள் (Achievers),
3) சாதனை படைக்க முயற்சிப்பவர்கள் (Aspirers) மற்றும்
4) வணிக சூழலை உருவாக்கி வருபவர்கள் (Emerging Business Ecosystems) என்று நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
90 சதவிகிதத்திற்கும் மேலாக மதிப்பெண்கள் பெறும் மாநிலங்கள் சிறந்த சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெறும். அந்த வகையில், தமிழ்நாடு, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கிய இந்த தரவரிசைப் பட்டியலில், 96.97 சதவிகித மதிப்பெண்கள் பெற்று, மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது. 2016-17ஆம் ஆண்டில் 18ஆவது நிலை, 2019ஆம் ஆண்டு 14ஆவது நிலை என்றிருந்த தமிழ்நாடு, பெருமளவு முன்னேற்றம் கண்டு தற்போது 3ஆவது நிலையைப் பெற்றுள்ளது.
* திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிக்கு வந்து, இந்த ஓராண்டு காலத்தில், எடுத்த முயற்சிகளின் காரணமாக, இதுவரை 192 ஒப்பந்தங்கள் போட்டப்பட்டிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய். கடந்த ஆண்டு ஈர்த்த முதலீடுகளைவிட, 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்க்கப்பட்டுள்ளது.
*ஒன்றிய அரசின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை (DPIIT) பரிந்துரைத்த 301 சீர்திருத்தங்களைச் (Reforms) செயல்படுத்தியமைக்காகவும், DPIIT நடத்திய பயனர் கருத்துக் கணக்கெடுப்பு (User feedback) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த வணிகம் புரிதலை எளிதாக்கும் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தங்களை சிறப்பான முறையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியதால், பயனீட்டாளர்களிடமிருந்து சிறந்த கருத்துக்களை பெற முடிந்தது. எனவே தான், தரவரிசையில் சிறப்பான முன்னேற்றத்தினை தமிழ்நாடு அடைந்துள்ளது.