தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் வாக்குறுதிகளை திமுக விரைந்து செயல்படுத்தாவிட்டால் தமிழ்நாடு தழுவிய போராட்டம் - அதிமுக - அதிமுக மாவட்ட செயலாளர்கள்

தமிழ்நாட்டின் இதயத் துடிப்பான காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான உரிமையைக் காப்பீர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாக கர்நாடக அரசு மேகதாதுவில், காவிரி நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

http://10.10.50.85//tamil-nadu/09-July-2021/tn-che-10-admkmeeting-7209106_09072021205014_0907f_1625844014_859.jpeg
http://10.10.50.85//tamil-nadu/09-July-2021/tn-che-10-admkmeeting-7209106_09072021205014_0907f_1625844014_859.jpeg

By

Published : Jul 9, 2021, 9:41 PM IST

சென்னை:அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக
அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!1. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்பீர்.2. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவீர்.3. பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையை குறைப்பீர்.4. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்.5. தாய்க்குலத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.6. நெல் கொள்முதலுக்கு காலம் தாழ்த்தும் திமுகவுக்கு கண்டனம்.ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் -1
தமிழ்நாட்டின் இதயத் துடிப்பான காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான உரிமையைக் காப்பீர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாக கர்நாடக அரசு மேகதாதுவில், காவிரி நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றுக்கு இரண்டாக தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது.

கடந்த திமுக ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கத் தவறியது போல் அல்லாமல், இப்பொழுதேனும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும்படியாக மேகதாதுவில் அணைகள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அதிமுக
தீர்மானம் -2கரோனா சூழலில் வேலையின்மை, பண வீக்கம், வருமானம் இன்மை, விலைவாசி உயர்வு , எதிர்காலம் குறித்த கேள்விக்குறி என்று ஏழை, எளிய, நடுத்தர உழைக்கும் மக்கள் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்திலும், ஒரு சில பிரிவினர் மக்களை மேலும் துயரத்தில் தள்ளும் வகையில் கொள்ளை லாபம் ஈட்டுவதில் ஈடுபட்டிருப்பது வேதனைக்குரியது.

ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக இதில் தலையிட்டு ஆக்கப்பூர்வமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் எளியோர் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களின் கண்ணீரைத் துடைக்கும் வகையில், விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு; சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு; மருத்துவத் தேவைகளுக்கான கட்டண உயர்வு என்று எட்டுத் திசையில் இருந்தும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுவதால் தமிழ்நாட்டு மக்கள் படும் துயரம் பெரும் வேதனையைத் தருகிறது . விரைந்து செயலாற்றி, விலைவாசியைக் கட்டுப்படுத்தி, வேலை வாய்ப்புகளைப் பெருக்கி, நம் மக்களின் துன்பம் துடைக்க முன் வருவீர் என்று அரசாள வந்திருப்போரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் -3
பெட்ரோல் , டீசல் , சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றின் விலைகளைக் குறைப்பதாக கொடுத்த வாக்குறுதியை மாநில ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். அனைத்துத் தொழில்களுக்கும் அடிப்படையாக விளங்கும் எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் , நம் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கிறது; விலைவாசி உயர்கிறது; மக்கள் படும் துன்பம் கூடிக் கொண்டிருக்கிறது .

ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை 5 ரூபாயும் , டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்பதாக வாக்குறுதி அளித்த தி.மு.க. , உடனடியாக இந்த விலை குறைப்பை அமல்படுத்துவது தான் நாணயமான செயல் என்பதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது . எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை இதுவரை அமல்படுத்தாததற்கு தி.மு.க. அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது . இந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றாவிடில் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.

அதிமுக

தீர்மானம் - 4
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் , தமிழக மக்களின் நலன்களைப் பேணுவதிலும் தன்னிகரில்லாது செயல்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொற்கால ஆட்சியைப் பற்றி அவதூறு பரப்பியும் , நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை அளித்தும் , தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க. , அந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து இன்னும் வாய் திறக்காதிருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது . தி.மு.க. அளித்த வாக்குறுதியை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது .

தீர்மானம் - 5

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் பரப்புரையின்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும் . இல்லையேல் , தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு, தாய்மார்களின் பங்கேற்போடு மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கும், மற்ற மகளிருக்கும் பலவகையான பணப் பயன்களை அளிப்பதாக திமுக வாக்குறுதி அளித்து சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. எனவே அந்த வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.


தீர்மானம் - 6

விவசாயிகள் விளைவித்த நெல்லை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி விரயம் ஏற்படுவதற்குக் காரணமான தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு , உடனடியாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்துகிறோம். விவசாயிகள் தாங்கள் விளைவித்து கொண்டுவந்த நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்து, அதற்குண்டான உரிய விலையை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மேகதாது - அனைத்துக்கட்சி கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details