இது குறித்து அந்த அறிக்கையில், "டிசம்பர் 05 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே உலகம் என வாழும் கோடான கோடி தொண்டர்களுக்கும் ஜெயலலிதாவின் பெயரை உளமார நேசித்து வாழும் உலகத் தமிழர்களுக்குப் பெருந்துயர் தந்த பேரிடர் கறுப்பு நாள்.
சிப்பிக்குள் தவமிருந்து முத்துக்கு உதிப்பதுபோல், செந்தமிழ் பூமிக்குச் சேவையாற்றி சந்தனமாய் கரைவதற்கே சந்தியா தாய் வசத்தில் சங்கல்பம் வாங்கி வந்த சரித்திரமாய் நெருப்பாற்றில் நீந்தி நித்தமும் பிறப்பெடுத்த ஃபீனிக்ஸ் பறவையாய் தேசத்தின் பொது வாழ்வு முழுவதுமே ஆணாதிக்கத்தால் நிரம்பிவழிந்த காலத்தில், பேரறிஞர் அண்ணா அமர்ந்த பெருமைமிக்க அதே மாநிலங்களவை இருக்கையில் தான் அமர்ந்து பின்னாளில் அகவை நாற்பதில் அரசாள வந்து அரசியல் உலகையே தேனாதிக்கமாய் மாற்றிக்காட்டிய திறமைகளின் குவியலாக, இந்நாட்டு அரசியலை தென்னாட்டுப் பக்கம் திருப்பிக் காட்டிய தேவதையாக 6 முறை தமிழ்நாட்டை அரசாண்டு தன் சிங்க நாதத்தை முடித்துக்கொண்டு வங்கக் கடலோரம் துயில் கொண்டும், நம்மை வழி நடத்தும் தெய்வமாய் ஜெயலலிதா நம்மைவிட்டு விடைபெற்ற இந்நாளில்தான், அவர் தம் நீங்காத நினைவுகளில் ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழினமே ஆழ்ந்திருக்கிறது.
வீதி வழி நடந்துபோகும் சாமனியரையும் கோட்டை கொத்தளத்தில் அமர்த்தி பச்சை மையில் கையெழுத்திடும் வாய்ப்பினை வழங்கும் ஒரே கட்சி அதிமுக. உலகமே வியந்து போற்றும் ஒப்பில்லாத ஜனநாயகப் பேரியக்கத்தை நடத்திய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடைசி சூளுரை ஒன்று மட்டும்தான். எனக்குப் பின்னாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்று பேரவையில் அவர் ஓங்கி ஒலித்தார். அதனைக் கடுகளவும் குன்றாது காப்பாற்றுவது நம்மை வாழ்வித்த அவருக்கு நாம் செய்ய வேண்டிய நன்றிக் கடனாகும்.