தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உச்சகட்டத்தில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் - வெல்லப்போவது யார்..? - admk policy

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எழுப்பப்பட்ட ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உச்சகட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் - வெல்லப்போவது யார்..?
உச்சகட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் - வெல்லப்போவது யார்..?

By

Published : Jun 19, 2022, 1:56 PM IST

சென்னை: அதிமுகவில் கடந்த ஜூன் 14ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் இறுதியாக ஏதாவது கருத்து கூற வேண்டும் செய்தியாளர்கள் கேட்டதற்கு சில மாவட்டச் செயலாளர்கள் ஒற்றைத்தலைமை கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது இருந்து அதிமுகவில் சலசலப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

அடுத்தடுத்த நாட்களில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இருவரும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர். இதில் ஓபிஎஸ் அதற்கு அடுத்து இரண்டு முறை அதிமுக தலைமைக் கழகத்திற்கு ஆலோசனைக்காக வந்து சென்றுள்ளார். ஆனால், ஈபிஎஸ் தலைமைக் கழகத்திற்கு வராமல் அவரது வீட்டில் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், ஒரு சில காரணங்களால் அது தள்ளிக்கொண்டே சென்று, இறுதியாக தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல்படி ஜூன் 23ஆம் தேதி நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகவும் முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தொடரும் இழுபறி:2017ஆம் ஆண்டு அணிகள் இணைந்தபோது அதிமுகவில் இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. அப்போது இருந்தே பல்வேறு விவகாரங்களில் முடிவு எடுக்க முடியாமல் அதிமுக திணறி வந்தது. தேர்தல்களில் தொடர் தோல்வி, பல விவகாரங்களில் முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை போன்ற செயல்பாடுகள் அதிமுகவிற்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. 2021 சட்டப்பேரவைத்தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கும்போதும் நீண்ட இழுபறிக்கு பிறகே அறிவிக்கப்பட்டார். இப்படி முடிவுகளை எடுப்பதற்கு யார் தடங்கலாக இருக்கின்றார், என எடப்பாடி தரப்பினர் ஒற்றைத்தலைமை விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என காத்துக்கொண்டிருந்தனர்.

மேலும் சமீபத்திய மாநிலங்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் முதலில் எடப்பாடி ஆதரவாளர்களாக கருதப்படும் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமாருக்கு தருவதாக இருந்தது. ஆனால், அதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தரவில்லை. அதுவும் இழுபறிக்கு பிறகு சி.வி.சண்முகமும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் தர்மர் ஆகிய இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

அப்போது எடப்பாடி தரப்பினரிடையே 'கட்சியில் 90 விழுக்காடு மாவட்ட நிர்வாகிகளும், 90 விழுக்காடு எம்.எல்.ஏக்களும் நமக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களை நாம் எடுக்க முடியவில்லை' என சர்ச்சை பேச்சுகள் பேசப்பட்டன.

எடப்பாடி தரப்பினர் ஒற்றைத்தலைமை குறித்து விவாதம் எழுப்ப சரியான சந்தர்ப்பத்திற்கு காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு சரியான நேரமாக பொதுக்குழு மற்றும் செயற்குழு அமைந்துள்ளது. எப்படியாவது ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வந்துவிட வேண்டும் என்ற கோணத்தில் தொடர்ந்து எடப்பாடி தரப்பினர் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த செயல்பாடுகளைப் பார்த்து கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் எந்த தீர்மானமும் கொண்டு வரமுடியாது எனத் தெரிவிக்கின்றனர்.

ஈபிஎஸ்ஸிற்கு ஆதரவு அதிகம்: இதன் மூலம் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட 64 மாவட்டச்செயலாளர்கள் ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவும், 11 மாவட்டச் செயலாளர்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் மாவட்டச்செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் அதிகளவு ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தாலும் ஒற்றைத்தலைமை தீர்மானத்தை நிறைவேற்றக்கூடிய கையெழுத்து உரிமை ஓபிஎஸ்ஸுக்கும் இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதிமுக தொண்டர்கள்

மேலும் தொண்டர்கள் கூறும் போது 2017ஆம் ஆண்டு இரட்டைத் தலைமை தேர்வு செய்யும்போது பொதுச்செயலாளர் பதவியை ஜெயலலிதாவிற்கு நிரந்தரமாக கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒற்றைத்தலைமை குரல் ஒழிப்பது இவர்கள் ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமாகவே பார்க்கப்படும். இதனையும் மீறி ஒற்றைத்தலைமை கொண்டு வர முயற்சி செய்தால் கட்சி உடையும் நிலை ஏற்படும்.

நேற்று(ஜூன்18) அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினரிடையே தாக்குதல் நடைபெற்றது. ஒரு தரப்பினர் ஓபிஎஸ் என்றும், இன்னொரு தரப்பினர் ஈபிஎஸ் என்றும் முழக்கங்கள் இட்டனர். இதில் இருந்து ஒற்றைத்தலைமைக்கான பதவிப்போர் உச்சம் தொட்டுள்ளது.

ஒற்றைத் தலைமையை பெறப்போவது யார்?

ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடுவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அதிமுகவில் பதவிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. ஜூன் 23ஆம் வரை தனித்தனியே ஆலோசனை நடத்துவது தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உச்சகட்டத்தில் அதிமுகவின் அரசியல் போர் நடந்து கொண்டிருப்பது ஜூன் 23ஆம் தேதி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

இதையும் படிங்க:1987ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் எழுந்த "ஒற்றைத் தலைமை" விவகாரம்... ஒரு விரிவான அலசல்...

ABOUT THE AUTHOR

...view details