தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவைக் குற்றவாளியாக்கி அதிமுக நாயகனான கதை - jayalalitha

முதல்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஜெயலலிதா தனது அதிகாரத்தை இஷ்டத்துக்கு பயன்படுத்தியதாகவும், தனது அமைச்சர்களை இஷ்டத்துக்கு இருக்கவிட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது.

ட்ச்ஃப
டச்ஃப்

By

Published : Apr 2, 2021, 3:53 PM IST

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் கடந்த 50 வருடங்களாக மாறி மாறி மாநிலத்தை ஆட்சி செய்கின்றன. இரு கட்சிகளும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

தற்போதைய அதிமுக ஆட்சியில்கூட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மீது, திமுக தரப்பு ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து வைக்கிறது.

அதேசமயம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களைத் திமுக செய்திருப்பதாக அதிமுக தொடர்ந்து கூறிவருகிறது.

இச்சூழலில் சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் தண்டனைப் பெற்று அதிமுகவிலிருந்தும் எம்.எல்.ஏக்கள் சிறை சென்றிருக்கிறார்கள். ஏன், அந்தக் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று அக்கட்சித் தொண்டர்களால் புகழப்பட்ட ஜெயலலிதாவும், அவரது தோழியுமான சசிகலாவும் சிறை சென்றது அனைவரும் அறிந்தது. அவர்கள் தவிர்த்து அதிமுகவில் தண்டனைப் பெற்ற எம்.எல்.ஏக்கள் யார் யார் என்பது அனைவரும் அறிய வேண்டியது.

சீமானின் மாமனார் கா காளிமுத்து:

இனத்தை அழித்த காங்கிரஸுக்கு துணை போன கட்சி திமுக, குடும்ப அரசியல் செய்யும் கட்சி திமுக தொடர்ந்து பத்து வருடங்களுக்கும் மேலாக குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மாமனாரும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர், சபாநாயகருமான கா காளிமுத்து மீதே மோசடி வழக்கு பதியப்பட்டது.

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த காளிமுத்து 1982-1983ஆம் ஆண்டுகளில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வேளாண் துறை நிதியை முதலீடு செய்வதாகவும், அதற்கு கைமாறாக அவர் பரிந்துரைப்பவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமென ரகசிய ஒப்பந்தம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

கா. காளிமுத்து

காளிமுத்துவின் சிபாரிசில் அவரது நண்பர்களான ராபின் மெயின், சூரியக்குமார், சாகுல் ஹமீது, சோமசுந்தரம், பசில் சாம் உள்ளிட்ட சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து ஒன்றரை லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய்வரை லாரி மற்றும் டிராக்டர்கள் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர்.

கடன் பெற்றவர்கள் அந்தக் கடனுக்குரிய தவணைத் தொகையை செலுத்தவில்லை. மேலும், வாகனங்கள் குறித்து வங்கிகள் தரப்பில் விசாரித்தபோது வங்கிகளில் சமர்ப்பித்த ஆவணங்களில் இருந்த உள்ள பதிவு எண்களில் உள்ளவாறு வாகனங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த வங்கிகள் சிபிஐயில் புகார் அளித்தன. அதனடிப்படையில், 1984ஆம் ஆண்டு சிபிஐ அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. காளிமுத்து, ராபின் மெயின், பசில் சாம், சூரியக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட 32 பேர் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். 1987ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சிகளாக 92 பேர் விசாரிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையானது கடந்த 2016ஆம் ஆண்டு முடிந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ராபின் மெயின், பசில் சாம், சூரியக்குமார், சோமசுந்தரம், சாகுல் ஹமீது ஆகிய ஐந்து பேரை குற்றவாளிகள் எனவும், 11 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே காளிமுத்து உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.

திமுக மீது தொடர்ந்து விமர்சனத்தை வைத்துவரும் சீமானின் மாமனாரே ஒரு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டது குறித்தும் அதில் அவரது நண்பர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறித்தும் சீமானிடம் என்ன பதில் இருக்கிறது. ஒருவேளை காளிமுத்து உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவரும் சிறைக்கு சென்றிருப்பார் என்கின்றனர் திமுகவினர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. அரங்கநாயகம்:

எம்ஜிஆரின் ஆட்சிக்காலத்தில் அமைச்சர் காளிமுத்து மீது மோசடி புகார் தெரிவிக்கப்பட்டதுபோலவே, எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக கருதப்படும் ஜெயலலிதாவின் 1991-1996 ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த சி. அரங்கநாயகம் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டது.

அரங்கநாயகம் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், தன் பெயரிலும், தன் மனைவி, மகன்கள் பெயரிலும் 1.15 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரங்கநாயகம்

அரங்கநாயகம் மீதான வழக்கில் 2006ஆம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் மீது பதியப்பட்ட வழக்குக்கு முகாந்திரமே இல்லை எனவே தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென அவர், அவரது மனைவி, மகன்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் மேல் முறையீடுக்கு சென்றனர். ஆனால், ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருப்பதால் வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என்று அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வழக்கை விரைந்து முடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து, வழக்கு விசாரணை விரைவாக நடந்தது. அதில், அரங்கநாயகம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அவர் மனைவி மீதும், மகன்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி:

அதிமுகவின் ஆட்சிக்காலங்களிலேயே மோசமான ஆட்சிக்காலம் என்று வர்ணிக்கப்படுவது ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சராகப் பதவி வகித்த 1991-1996ஆம் ஆண்டு ஆட்சிக்காலம்தான்.

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஜெயலலிதா தனது அதிகாரத்தை இஷ்டத்துக்கு பயன்படுத்தியதாகவும், தனது அமைச்சர்களை இஷ்டத்துக்கு இருக்கவிட்டதாகவும் குற்றச்சாட்டு இன்றளவும் இருக்கிறது. அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாகவே அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பும் இருக்கிறது.

அந்த ஆட்சிக் காலத்தில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தவர் சத்தியமூர்த்தி. அரங்கநாயகம் போலவே இவரும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.83 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புக்குச் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவர் மனைவி சந்திரா மீதும் 1997ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

சத்தியமூர்த்தி

சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், 2001ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, அதாவது அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை சிறப்பு நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்குச் சென்றது. நீண்ட நாள்கள் நடந்த இந்த வழக்கு விசாரணையில், சிறப்பு நீதிமன்றத்தின் விடுவிப்பாணையை ரத்து செய்து சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவரது மனைவி சந்திராவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து கடந்த 2018ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

முன்னாள் கல்வி அமைச்சர் பொன்னுசாமி:

இவரும் வழக்கம்போல் 1991-1996 ஆட்சிக்காலத்தில்தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார். அந்த ஆட்சிக்காலத்தில் அவர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 77.49 லட்சம் சொத்து சேர்த்ததாக 1998ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

1999ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தனி நீதிமன்றம் அவர், அவரது மனைவி, மகள் சகோதரர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.

பொன்னுசாமிக்கு மூன்று வருட கடுங்காவல் தண்டனை ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், அவரது மனைவி, மகள் , சகோதரர்களுக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவம்:

1991-1996ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில், சின்னசேலம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் ஆர்.பி. பரமசிவம். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததையடுத்து 1997ஆம் ஆண்டு அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில், பரமசிவம் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ.28 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புக்கு சொத்துகளை சேர்த்திருப்பது தெரியவந்தது. அத்துடன், பரமசிவத்திற்கு அவரது மனைவி பூங்கொடியும் உடந்தையாக செயல்பட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

பரமசிவம்

ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கின் விசாரணை மாற்றப்பட்டதையடுத்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ‘எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பிரிவுக்கு’ மாற்றப்பட்டது. அங்கே விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த 102 பேரிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு, தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்திற்கு சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். அதில் நான்கு வருட சிறைத்தண்டனை என தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோக, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதற்காக அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா ரெட்டியும் சிறைத்தண்டனை பெற்றதும் ஒரு கதை. முக்கியமாக, முதலமைச்சர் பதவியிலிருந்தபோதே நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு எழுதப்பட்ட ஜெயலலிதாவின் கதைதான் இருப்பதில் பெரிய கதை. அதனை அறியாதோர் இலர்.

இப்படி அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சிறை சென்ற கதை நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், இந்த குற்றக் கதையில் திமுகவை வில்லனாக்கி நாயகன் ஆகிக் கொள்கிறது அதிமுக.

ABOUT THE AUTHOR

...view details