தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2019, 2:14 PM IST

ETV Bharat / state

'அதிமுக - பாமக கூட்டணி தோல்வி மக்களின் தோல்வி' - ராமதாஸ் கடிதம்

சென்னை: "அதிமுக - பாமக கூட்டணியின் தோல்வி, மக்களின் தோல்வியாகவே அமைந்துள்ளது" என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸ் கடிதம்

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது,

தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் உங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மிகவும் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள், அதற்கு முற்றிலும் மாறாக அமையும் போது, ஏமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். நம்மால் நேசிக்கப்படும் ஒருவருக்கு இழப்பு ஏற்படும்போது, எவ்வாறு நமக்கு ஏமாற்றம் ஏற்படுமோ, அதுபோன்றதுதான் இதுவும். தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும்தான் ஏற்படுத்தினவே தவிர, எனக்குள் எந்தவித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தருமபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கியது. இந்தத் தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பது நமது முதல் இலக்கு. மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் நமது இரண்டாம் இலக்காகும். முதல் இலக்கை நம்மால் எட்ட முடியவில்லை என்றாலும் கூட இரண்டாவது இலக்கு நமக்கு சாத்தியமாகியிருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்கின்றன. இதன்மூலம் தீயவர்களின் கைகளில் நாடும், மாநிலமும் சிக்காமல் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் நமக்கு கிடைத்த வெற்றிதான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அதிமுக- பாமக

பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாமல் போனது பின்னடைவுதான். ஆனால், அதற்கு காரணங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் அதிமுக - பாமக கூட்டணியின் தோல்வி, மக்களின் தோல்வியாகவே அமைந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தாலும், கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு இப்போதும் வாக்குகளை வென்றுள்ளோம். இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம். நம்மை நாமே மேலும் வலுப்படுத்திக் கொண்டு மீண்டும் களத்திற்கு செல்வோம், வெற்றி பெறுவோம். கடந்த தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்த அளவுக்கு தோல்விகளையும் பரிசாகப் பெற்றுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details