இந்திய தேர்தல் ஆணைய அலுவலர்கள் ஆலோசனை
2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை நடத்தினர். இந்திய தேர்தல் ஆணைய பொது செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழுவினர் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பிரதிநிதியும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், "மே மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாடும் முழுவதும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 3 அல்லது 4ஆவது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த கிராமங்களில் வாக்குசாவடிகளை அமைக்க வேண்டும. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்கு சாவடிகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும், குடிபெயர்ந்து சென்றவர்களின் பெயர்களை உடனடியாக சேர்க்கவும், இறந்தவர்களின் பெயர்களை உடனடியாக நீக்கவும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.
மேலும் பேசிய அவர், "எளிய மக்கள் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதால் முதலமைச்சர் பொங்கல் பணத்தை அதிகரித்துள்ளார் தேர்தலுக்காக இதனை அறிவிக்கவில்லை" என்றார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
பின்னர் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி "தமிழ்நாட்டில் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வைத்துள்ளோம். தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கொடுக்கும் மனுவுக்கு உடனடியாக பதில்கள் தர வேண்டும், 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் கருத்து தெரிவித்துள்ளோம்.
கடந்த தேர்தலில் தபால் ஓட்டு முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தலில் வெற்றி பெற்ற அப்பாவு தோற்கடிக்கப்பட்டுள்ளார். எனவே, இதுபோன்ற தவறுகள் தபால் ஓட்டுகளில் நடைபெறக் கூடாது என வலியுறுத்தி, தபால் வாக்கு எண்ணிக்கை தனியாக நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளோம்" என்றார்.