ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுகவின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு நாளை (பிப்ரவரி 16) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவரது மனுவில், தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, அதில் இடம்பெற்றிருந்த பலர் தொகுதியில் இல்லை என்பதும், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்பதும், பல வாக்காளர்களின் பெயர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்களில், 7 ஆயிரத்து 947 இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்றும், 30 ஆயிரத்து 56 வாக்காளர்கள் தொகுதியில் வசிக்கவில்லை என்றும் இவர்கள் கள்ள ஓட்டு போட பயன்படுத்தக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.