சென்னை:தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளில் உள்ள ஆயிரத்து 64 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள மூன்றாயிரத்து 468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் உள்ள எட்டாயிரத்து 288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய உள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், "ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக தொடர்ந்த வழக்கில், அனைத்து வாக்குச்சாவடி, வாக்குப்பெட்டி வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உயர் நீதிமன்ற உத்தரவிட்டும், ஆளுங்கட்சிக்குச் சாதகமாகப் பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறின.
உரிய காரணமின்றி அதிமுகவினரின் வேட்புமனு நிராகரிப்பு, பணம் விநியோகம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் தேர்தல் அலுவலர்களோடு கூட்டம் என முறைகேடுகள் நடைபெற்றன. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த அக்டோபர் 20ஆம் தேதி ஆளுநரிடமும், ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் போன்று தற்போதும் விதிமீறல் நடைபெற்றுவிடக் கூடாதென நவம்பர் 1ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையத்திடமும் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தில் மனு
தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவில், உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும். ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் நடவடிக்கைகள் முழுவதையும் சிசிடிவி பதிவுசெய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு அலுவலர்களைத் தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க மத்திய அரசு அலுவலர்கள் அல்லது வெளிமாநிலத்தைச் சேர்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை அல்லது ரிசர்வ் படையைப் பயன்படுத்த வேண்டும் எனக் கோரப்பட்டது.
நேர்மையாக நடத்த கோரிக்கை