சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகியதை தொடர்ந்து தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலாவை வரவேற்று அதிமுவினர் போஸ்டர்கள் ஒட்டினால், அவர்களை அதிமுக தலைமை உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கி வருகின்றது.
பெங்களூருவில் இருக்கும் சசிகலா வரும் 8ஆம் தேதி சென்னை வரவுள்ளார். அவர் ஜெயலலிதா நினைவிடம் செல்லக் கூடாது என்பதற்காக அது பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிமுக கொடியை அவர் தனது காரில் பயன்படுத்தியது தொடர்பாக இன்று (பிப்.4) அமைச்சர் ஜெயகுமார், அமைச்சர் எஸ்.பி.வேலுமனி, அமைச்சர் சி.வி.சண்முகம், அமைச்சர் கே.பி. முனுசாமி, அதிமுக அவை தலைவர் மதுசூதனன் உள்ளிட்டவர்கள் காவல்துறைத் தலைமை இயக்குநர் திரிபாதியிடம் புகார் மனு அளித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் சட்டரீதியாக புகார்கள் தாக்கத்தை ஏற்படுத்தாது என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சசிகலாவைச் சந்திக்க காத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.