சென்னை: அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், சுமுக முடிவை எட்டும் வகையில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடைபெறும் பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்து சமரசம் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக ஈபிஎஸ்ஸையும், கட்சிக்கு ஒரே பொதுச்செயலாளராக ஓபிஎஸ்ஸையும், 11 பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவையும் அறிவிக்க ஆலோசனைகளும் பேச்சுவார்த்தைகளும் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலையில் இருந்தே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், இருவரின் ஆதரவாளர்களும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இல்லத்திற்கு மாறி மாறி சென்று தொடர் பேச்சுவார்த்தை நடத்துவது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த மாவட்டமான தேனியிலிருந்து சென்னை திரும்பிய கையோடு தனது ஆதரவாளர்களான கே.பி. முனுசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனையில் இறங்கினார் ஓபிஎஸ்.