சென்னை:மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான தீப ஜோதி ஓட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார். வருகின்ற 20ஆம் தேதி அதிமுகவின் மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரைக்கு அருகில் உள்ள வளைகுளம் என்ற பகுதியில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் மாநாட்டிற்கான பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற நாடளுமன்ற தேர்தலில் தங்களின் பலத்தை நிரூபிக்கும் விதமாக மதுரை மாநாடு அமைய வேண்டும் என்பதற்காக, 10க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனை நடத்தப்பட்டு, மாநாட்டிற்கான அழைப்புகளை வழங்கும் பணியில் அதிமுக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை திரட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
குறிப்பாக சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் காரணமாக தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு குறைந்துள்ளது என பேசப்பட்டது. இதனை உடைக்கும் விதமாகவும், தனக்கான செல்வாக்கை அதிகப்படுத்தும் விதமாகவும் மதுரையில் மாநாடு நடத்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டனர் என கூறப்படுகிறது. அதன்படி தொடர்ந்து மாநாட்டுப் பணி குறித்து ஆய்வுகளும், மாவட்ட செயலாளர் கூட்டம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என தொடர்ந்து நடந்து வருகிறது.