சென்னை: கடந்த சில வாரங்களாக அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வரும் ஜூலை 11 அன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஒற்றைத்தலைமையை ஏற்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் தரப்பும், அதிமுக பொதுக்குழு கூட்டமே நடைபெறக் கூடாது என ஓபிஎஸ் தரப்பும் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
முன்னதாக மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஈபிஎஸ் தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், ஓபிஎஸ் தரப்பினர் தொடக்கம் முதலே நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று (ஜூன் 28) உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில், “சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்யும் மனுவிற்கு, எங்கள் தரப்பினரை கேட்காமல் தீர்ப்பு வழங்கக்கூடாது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது எனவும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத்தலைவர் பதவி செல்லாது எனவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது.