சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதனை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி மற்றும் கோகுல இந்திரா உள்ளிட்டோர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.
அதைத்தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தேவநாதன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் தன்னை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினார். தாம் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'திமுக அரசு மீது வாக்காளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதை மக்களுக்கு எடுத்துச்சொல்லி திமுகவுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும். வருகிற 2024 மக்களவைத் தேர்தலிலும், அதேபோல் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என மக்கள் பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல்கள் அமையும்' என்றார்.