சென்னை: அதிமுகவின் அதிகாரபூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை செயற்குழு கூட்டம் ஒப்புதல் அளித்தது. அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளருக்கான அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. மேலும், மூன்றாவது அத்தியாயம் எடப்பாடி பழனிசாமி எனவும் மதுரையில் ஆக.20 ஆம் தேதி மாநாடு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
அதிமுகவின் செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக செயற்குழு அங்கீகரிக்கத்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கட்சியின் வளர்ச்சிகாக மதுரை மிகப்பெரிய மாநாடு நடத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கர்நாடகா தேர்தல் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். செயற்குழுவில் பொதுச்செயலாளருக்கான அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
அண்ணாமலை பற்றி இனிமேல் என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம் என பாஜகவைச் சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "அண்ணாமலை ஒரு அரசியல் கத்துக்குட்டி. நாங்கள் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. அண்ணாமலை அரசியலுக்கு வந்து இரண்டு வருடம்தான் ஆகிறது. அதைத்தான் அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர்களுக்கு பதில் கூற அவசியமில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். வளர்த்த கிடா மார்பில் பாயக் கூடாது. அது கிடாவாக இருந்தாலும் சரி, ஆடாக இருந்தாலும் சரி" என கூறினார்.