ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பயன்பாடற்று திறந்துகிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தோண்டப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளை, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
திறந்துகிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட, பல்வேறு அமைப்புகளும் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், அதிமுக தொழில்நுட்பப் பிரிவு (ஐடி விங்) விசில் ரிப்போர்ட்டர் (whistle reporter) எனும் புதிய செயலியை உருவாக்கியுள்ளது.
பயனற்றுக்கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற உதவும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலியை ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பிறகு பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறு உள்ள பகுதிக்குச் சென்று, இந்த செயலியில் உள்ள பச்சைநிற பொத்தானை அழுத்தினால் செயலியில் அந்தப் பகுதி கண்டறியப்பட்டு பதிவாகிவிடும். அதன்பிறகு அங்குள்ள ஆழ்துளைக் கிணற்றை, மழைநீர் சேமிப்புக் கிணறாக மாற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அறிமுகம் செய்த விசில் ரிப்போர்ட்டர் செயலி இதுவரை, இந்தச் செயலியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தப்படாத 100க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து, செயல்படாத ஆழ்துளைக் கிணறுகள் இருக்கும் இடங்களைக் கண்டறிய உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பேருந்தில் செல்ஃபோன் திருடிய பெண் கைது..!