சென்னை: திமுக அரசு பொறுப்பேற்ற பின் முதன்முறையாக வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்னர், கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஆக.9) நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
அதன் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், "ஜீரோ வரியில் ஏழைகள் பயனடைவதில்லை, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் லாபமடைகின்றன. வரியே வசூலிக்காவிட்டால் எப்படி ஆட்சி நடத்த முடியும். சரியான வரியை வசூலித்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். வரி அல்லாத வருமானம் முந்தைய திமுக ஆட்சியில் 1 விழுக்காடு ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 0.7 விழுக்காடாகத் குறைந்துள்ளது.
மறைமுக கடன்
10 ஆண்டுகளில் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கும் வரி வருவாயும் 33 விழுக்காடு அளவுக்குக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மறைமுக கடன் சுமார் ரூ.39 ஆயிரம் கோடி வாங்கப்பட்டுள்ளது. முந்தைய அரசால் வாங்கப்பட்ட இந்த கடன் குறித்தான சரியான விளக்கங்கள் இல்லை.
மாநில கடன் ரூ.5.70 லட்சம் கோடி
கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் வரி வருவாய் வளர்ச்சி 4.4% சரிந்துள்ளது. மாநிலத்தின் தற்போதைய கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது. நான்கு வழிகளில் மாநில அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. மாநில வரி, வரியில்லா வருவாய், ஒன்றிய அரசின் வரி பங்கீடு, திட்ட மானியம் ஆகியவையே ஆகும். இதில், மாநில வரி வருவாயில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது.