தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விளக்கமும் அளிக்காமல் ஓபிஎஸை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது" - உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு விளக்கம் - சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த உறுப்பினர்களை எந்த விளக்கமும் அளிக்காமல் நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

admk
admk

By

Published : Mar 17, 2023, 1:30 PM IST

சென்னை:அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகவும், ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர் செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுக்குழு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பன்னீர் செல்வம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும், தீர்மானம் கொண்டு வர பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டு பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், உரிமையியல் வழக்கு தொடர நீதிமன்ற தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் குறிப்பிட்டது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதுடன், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது சட்ட விரோதமானது- அதனால், கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொழுக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் பிரபாகரன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு இன்று (மார்ச்.17) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "ஓ.பி.எஸ் மற்றும் மனோஜ் பாண்டியன் நீக்கப்பட்டது சரியா? தவறா? என்பதை முடிவு செய்ய வேண்டும். உறுப்பினரை நீக்குவதற்கு முன் விளக்கம் கேட்கப்படவில்லை. எந்த குற்றச்சாட்டும் இல்லை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கட்சியின் எந்த முடிவும் எடுக்க வேண்டும் என கட்சி விதி 35 கூறுகிறது. கட்சி விதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் உறுப்பினர்கள் நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், என்ன காரணத்திற்காக நீக்கம் என தெரிவிக்கவில்லை.

மனுதாரர்கள் வேறு எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை, கட்சிக்கு எதிராகவும் பேசவில்லை. உட்கட்சி பூசலை மையமாக வைத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றால் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். 7 நாட்களுக்குள் விளக்க நோட்டீஸ் வழங்க வேண்டும். கட்சி விதிகளின்படி முதலில் தற்காலிக நீக்கமும், பின்னர் நிரந்தரமாகவும் நீக்க முடியும். அதனால், விதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், "பொதுக்குழுவுக்கு எவரையும் நீக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களை நீக்குவதற்கு முன் எந்த விளக்கமும் கேட்ட அவசியமில்லை. கட்சிக்கான அதிகாரத்தின் படி உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்" என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: "மீண்டு வருவார், மீண்டும் வருவார்" அதிமுகவில் மாற்றம்; ஓபிஎஸ் போட்ட பலே திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details