தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு வழக்கு: சசிகலா பதிலளிக்க அவகாசம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க சசிகலாவிற்கு அவகாசம் வழங்கி சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்ட வழக்கு: சசிகலா பதிலளிக்க அவகாசம்
அதிமுக பொதுக்குழு கூட்ட வழக்கு: சசிகலா பதிலளிக்க அவகாசம்

By

Published : Jul 20, 2021, 2:24 PM IST

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி காலமானார். அதன் பின்னர் பொதுச் செயலாளராக சசிகலாவையும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனையும் அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

இதன் பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு நான்காண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

தீர்மானம் நிறைவேற்றம்

அவர் சிறையில் இருந்தபோது, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலா, தினகரன் நீதிமன்றத்தில் வழக்கு

இதையடுத்து, அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர்.

பின்னர், இந்த வழக்குகள் சென்னை நகர சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, டிடிவி தினகரன் அமமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து தான் விலகி கொள்வதாக அவர் தரப்பில் தெரிவிக்கபட்டது.

சசிகலாவிற்கு அவகாசம்

இதையடுத்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை ஜூலை 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ - இபிஎஸ் பளீர்

ABOUT THE AUTHOR

...view details