தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆளுநர் அப்போது தேவை; இப்போது தேவை இல்லையா?" - மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி கேள்வி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

திமுக அரசு கொண்டு வரும் மசோதாவிற்கு ஆளுநர் அப்படியே கையெழுத்து போட வேண்டுமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் அவருக்கென்று அரசியலமைப்பு சட்டத்தின்படி கொடுக்கப்பட்ட அதிகாரத்தின்படிதான் செயல்படுகிறார் என்றும் குறிப்பிட்டார்.

ADMK
திமுக

By

Published : Apr 10, 2023, 5:25 PM IST

சென்னை: தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அதேபோல் மேடைகளில் பேசும்போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். திருக்குறளை ஜி.யு.போப் தவறாக மொழி பெயர்த்துள்ளார், ஆதமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று அழைக்கலாம், வெளிநாட்டில் நிதி வாங்கி கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது, மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டால் அது நிராகரிப்பதற்கு சமம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சையான கருத்துகளை ஆளுநர் ரவி கூறியுள்ளார். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் அவரது அலுவல்களை மீறி அரசியல்வாதி போல பேசுவதாகவும் தமிழக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த சூழலில், தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இன்று(ஏப்.10), தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அதிமுகவினர், சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "சட்டப்பேரவையில் பேச்சுரிமைக்கு சபாநாயகர் மதிப்பளிக்க மறுக்கிறார். சட்டமன்ற உறுப்பினகர்கள் அதிகம் பேசுவார்கள் என்று பார்த்தால், சபாநாயகர் அதிகம் பேசுகிறார். பெரும்பான்மை அடிப்படையில்தான் சட்டப்பேரவை இயங்குகிறது. அதன் அடிப்படையில் எதிர்க்கட்சியில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளவர்களுக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்குவதில் என்ன சிக்கல்?- சட்டமன்றத்தின் மாண்பையே சபாநாயகர் குலைக்கின்றார். நானும் சபாநாயகராக இருந்ததால் சட்டவிதிகள் எனக்கும் தெரியும்" என கூறினார்.

ஆளுநருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பேசிய ஜெயக்குமார், "ஜெயலலிதா மறைக்கு பின்னர் எங்களுடைய ஆட்சியை கலைக்க கோரி அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் யாரிடம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கோரினார்? - சட்டப்பேரவையில் இருந்து சட்டையை கிழித்துக் கொண்டு ஏன் ராஜ் பவனை நோக்கி ஸ்டாலின் சென்றார்? - அவர்களுக்கு தேவைப்படும்போது ஆளுநர் தேவை, இல்லையென்றால் தூக்கி எறிந்து விடுவார்களா? - ஆளுநர் என்றால் இவர்கள் கொண்டு வரும் மசோதாவிற்கு அப்படியே கையெழுத்து போட வேண்டுமா? அவருக்கு என்று அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிகாரம் உள்ளது. அதன்படிதான் ஆளுநர் செயல்படுகிறார். அதேபோல் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் ஆளுநர் ஏன் அப்படி பேசினார்? என அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ABOUT THE AUTHOR

...view details