தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை ஸ்டாலின் தீர்த்து வைக்க வேண்டும்’ - மைத்ரேயன் கோரிக்கை - ஜெயலலிதா அப்போலோ

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி, அதிலுள்ள சந்தேகங்களை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் கோரியுள்ளார்

ஜெயலலிதா மரணம்
ஜெயலலிதா மரணம்

By

Published : Aug 27, 2021, 1:21 PM IST

ஜெயலலிதா மரணம், அதில் உள்ள சந்தேகங்கள் குறித்து அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களைப் பொறுத்தவரை ஜெயலலிதா இதய தெய்வம் மட்டுமல்ல குல தெய்வமாக பூஜிக்கப்படுகிறார்.

ஜெயலலிதா

நானெல்லாம் ஜெயலலிதாவின் நிழலில் மட்டுமே வளர்ந்தவன். 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலம் குன்றி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது விரைவில் தேறி விடுவார் என்று தான் நம்பினோம். ஆனால் டிசம்பர் 5ஆம் தேதி நிகழ்ந்த ஜெயலலிதாவின் திடீர் மரணம் அதிர்ச்சி அளித்தது.

ஓபிஎஸ் தர்மயுத்தம்

2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அண்ணன் ஓபிஎஸ் தர்ம யுத்தத்தை தொடங்கியபோது ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்பது முக்கிய முழக்கமாக இருந்தது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் என் தலைமையில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தோம்.

தொடர்ந்து ஆகஸ்டில் அணிகள் இணைந்தபோது ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக இருந்தது.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் ஸ்டாலின்

கோடிக்கணக்கில் செலவிடப்பட்ட அரசுப்பணம்

அதையடுத்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 90 விழுக்காடு விசாரணை முடிவுற்ற நிலையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் அப்பல்லோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் ஆணையத்திற்கு எதிராக தடையாணை பெற்றது. இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தடை காரணமாக எதுவும் நடக்கவில்லை. கோடிக்கணக்கில் அரசுப்பணம் செலவிடப்பட்டது தான் மிச்சம்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 21இல் வரிசை எண் 22இல் "ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்ம மரணம் குறித்து கழக ஆட்சியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு இழைத்தவர் எவராயினும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் " என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதி

புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையினை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிகிறேன். ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று முடிவு வந்தால் ஒவ்வொரு அஇஅதிமுக தொண்டனும் அளவற்ற மகிழ்ச்சி அடைவதோடு நிம்மதிப் பெருமூச்சும் விடுவான்.்

மைத்ரேயன்

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை விரைந்து நீக்கவும், நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கச் செய்யவும், அதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்றிலிருந்து சரியாக 100 நாள்களில் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் வருகிறது. அதற்குள் முதலமைச்சர் இதை நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details