தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவிலிருந்து நீக்கம்; முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி நீதிமன்றத்தில் மேல்முறையீடு - Former AIADMK MP KC Palanisamy

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அதிமுக எம்பியான கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு ஏற்கனவே தள்ளுபடியான நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 23, 2023, 4:07 PM IST

சென்னை:அதிமுக கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து அக்கட்சியின் முன்னாள் எம்பியான கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜன.23) மேல் முறையீடு தாக்கல் செய்துள்ளார். அதிமுக முன்னாள் எம்பியாக இருந்த கே.சி.பழனிசாமி, கடந்த 2018ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்டதை எதிர்த்து 2021-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாமல், மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'கரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், அதன்படி கடந்த 2020 மார்ச் முதல் 2021 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாததால், 2021 அக்டோபருக்கு பின் 90 நாட்கள் அவகாசம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், குறித்த காலத்தில் வழக்கு தொடரவில்லை எனக் கூறி தனது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தது தவறு' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மேலும், அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தன்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை எனவும், தன்னை நீக்கியது கட்சியின் ஆரம்பகால விதிகளுக்கு முரணானது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இந்த மேல் முறையீட்டு மனு 25 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்துள்ளதால், தாமதத்தை ஏற்று, வழக்கை விசாரணைக்கு பட்டியலிடவும், மேல் முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை இன்று (ஜன.23) விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, 25 நாட்கள் தாமதத்தை ஏற்று, வழக்கை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: குஜராத்தில் ஓபிஎஸ்.. தேனியில் ஈபிஎஸ்.. இருப்பை நிரூபிக்க போட்டாபோட்டி..

ABOUT THE AUTHOR

...view details