சென்னைசாந்தோமில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , “ஏழு பேர் விடுதலையில் தமிழர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். அதை தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
அவரது மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனவே, ஏழு பேர் விடுதலை என்பது அதிமுக எடுத்த தொடர் சட்ட நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த சமயத்தில் அவர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நளினியை தவிர மீதமுள்ளவர்களின் தண்டனையை குறைக்க கூடாது என கையெழுத்திடப்பட்டது. ஆனால் தற்போது, 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்த உடன், அந்த விடுதலைக்கு நாங்கள் தான் காரணம் என திமுக மார்தட்டி கொள்கிறது. இதில் எந்த வித அடிப்படை முகாந்திரமும் இல்லை. அவர்கள் விடுதலைக்கு திமுக ஒரு துரும்பை கூட தூக்கி போடவில்லை.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்திலேயே அவர் நினைத்திருந்தால் எழுவரையும் விடுதலை செய்திருக்கலாம். பொய்யே வாழ்க்கையாக கொண்ட கட்சி திமுக. தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதில் அக்கறை காட்டுவதில்லை. குடும்ப வளர்ச்சி, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டும், இது தான் திமுகவினரின் நோக்கம்.
10 சதவீத இட ஒதுக்கீடு காங்கிரஸ் உடன் திமுக கூட்டணியில் இருந்த போது கொண்டு வரப்பட்டது. அப்போது மத்திய அமைச்சராக மு.க அழகிரி இருந்தபோது நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்கு அப்போது திமுக சம்மதம் தெரிவித்தது.