சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை தீவிரமாக இறங்கி உள்ளன. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் பிரிந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தனித்தனியாக ஆதரவு கோரி வருகின்றனர்.
ஈபிஎஸ் அணியினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளில் அதிதீவிரம் காட்டி வருகின்றனர். மறுபுறம் ஓபிஎஸ் அணியினர் கூட்டணி கடசிகளை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்த ஓபிஎஸ் தேர்தலில் ஆதரவு கோரினர்.
அதேநேரம் ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக அணிக்கு ஆதரவளிப்பதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களிடையே குளப்பத்தை ஏற்படுஇத்தி உள்ளது. தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்தித்து ஆதரவு கோரினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "பாஜக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்ததாகவும் தெரிவித்தார். மாநில நலன் பற்றி விரிவாக மனம் விட்டு இருதரப்பினரும் பேசியதாகவும், இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் பட்சத்தில் தேசிய நலன் கருதி ஆதரவு அளிப்பதாக கூறியதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாத பட்சத்தில் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்குமாறு அண்ணாமலையை ஓபிஎஸ் தரப்பு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜகவை பயன்படுத்தி ஈபிஎஸ் அணியை எதிர்கொள்ள வியூங்களை ஓபிஎஸ் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஈபிஎஸ் தரப்பினரும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது.
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இறுதியாக ஈபிஎஸ் தரப்பினர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர். பாஜகவின் நிலைப்பாட்டை பொறுத்தவரை அதனுடைய தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது.
அதேநேரம் பாமக, ஈரோடு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை கொண்டு உள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும், தனது செல்வாக்கை நிரூபிக்க சுயேட்சையாகவும் களம் இறங்கும் நோக்கில் ஈபிஎஸ் அணியினர் செயல்பட்டு வருகின்றனர். இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.31ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்குள் பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவரும் என ஈபிஎஸ் தரப்பினர் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.