சென்னை :நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்திக் கொண்டு வரக்கூடிய நிலையில் அதிமுகவும் தனது பணியை தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை பலப்படுத்துவது மற்றும் களப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அறிவுரைகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கட்ட ஆலோசனைகளை தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட கழக செயலாளர்களுக்கு வழங்கி வருகிறார்.
இதில் ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டதாக அதிமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் நாளை (நவ. 21) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.