தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள்’ - ஓபிஎஸ் கோரிக்கை - ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: கரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

OPS
OPS

By

Published : Jun 15, 2021, 8:06 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அனைத்து விதமான நோய்களுக்கும் தரமான மருத்துவ வசதிகளை அளிப்பது, மருத்துவத் துறையில் முன்னேறி வரும் தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப உயர்தர சிகிச்சை வழங்குவது, இவற்றின் மூலம் இந்தச் சமுதாயத்தை ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்றுவது ஆகியவை மாநில அரசின் கடமைகளாகும்.

கரோனா தாக்கம் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில், கரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்கள், அரசு மருத்துவமனைகளில் அந்த நோய்களுக்கான சிகிச்சை பெறுவதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக உயிர்க்கொல்லி நோயான கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதன் விளைவாகவும், அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுக்கான பெரும்பாலான படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக மாற்றப்பட்டதன் காரணமாகவும், கரோனாவால் பாதிக்கப்படாத பிற நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக நீண்ட காலம் காத்திருக்கக்கூடிய சூழ்நிலை உருவாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளில்கூட இது போன்ற நிலைமை இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்படாதவர்களுக்காக தனி வளாகம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அங்கு சாலை விபத்தினால் காயமடைந்தவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மட்டுமே சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதயநோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படுவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவர்கள் உள்ளுறை நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

இதற்கு இன்னமும் சிறிது காலமாகும் என்று சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று மருத்துவ உதவி தேவைப்படுவோர் ஆயிரக்கணக்கில் இருப்பதாக தெரிய வருகிறது. இதனால் பாதிக்கப்படுவர்கள் ஏழை எளிய மக்கள் தான்.

இந்த நிலை நீடித்தால் கரோனா தொற்று அல்லாதோரின் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கரோனா தொற்று இல்லாத பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி கரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details