சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (டிசம்பர் 4) வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில், சசிகலாவை எந்தவிதத்திலும் அதிமுகவில் நுழைய விடக்கூடாது என்ற நோக்கத்தில் தேர்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேட்பு மனு தாக்கல்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், நேற்று (டிச. 3) காலை 10 மணியளவில் தொடங்கிய வேட்பு மனு தாக்கல், இன்று (டிசம்பர் 4) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. வேட்பு மனுக்கள் நாளை (டிசம்பர் 5) காலை பரிசீலிக்கப்படும் என்றும் 6ஆம் தேதி மாலை 4 மணி வரை மனுவை திரும்ப பெறலாம் என்றும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
அதை தொடர்ந்து டிசம்பர் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை நடத்தி, தேர்தல் முடிவு டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு அதிமுக பொது குழுவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவியையும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என சட்ட விதி 20 (அ) திருத்தியமைக்கப்பட்டு, அண்மையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால் இனி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என மாற்றம் செய்யப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனநாயக முறையில் தேர்தல்
மனுதாக்கல் முடிந்தபின் செய்தியாளரை சந்தித்து பேசிய தேர்தல் நடத்தும் ஆணையாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கூறியதாவது, “உள்கட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் எத்தனை பேர் செய்துள்ளனர். யார் யார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் எனற தகவல்கள் நாளை வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகே தெரிவிக்கப்படும்.
மேலும் வேட்புமனு தாக்கல் குறித்து தற்போது வரை தேர்தல் ஆணையர்களுக்கு எந்தவித புகார்களும் வரவில்லை. உள்கட்சி தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கல்
இவரைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “அதிமுக உள்கட்சி தேர்தல் முறையாக அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்றைய தினம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் யார் வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்யலாம், இதற்கு மாற்று கருத்து இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, மனுக்கள் வழங்கப்பட்டு சரிபார்க்கப்பட உள்ளன, ” என்றார்.
இதுவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவர்களது பெயரில் 200க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் நாளை (டிசம்பர் 5) விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நாளை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த 32 பேரில் 5 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது. வேட்பு மனுவை வாபஸ் செய்யும் நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை தவிர மற்ற அனைவரும் வேட்பு மனுவை வாபஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தொண்டர்களும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற கூற்றுக்கிணங்க இவ்வாறு தேர்தல் வியூகங்கள் நடத்தப்படுகிறது. எனவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. இதனால் அதிமுகவில் சசிகலா உள்ளே நுழையாமல் இருப்பதற்காக அடித்தளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர் கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இரண்டாவது நாளாக அடி உதை
இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் ஆதரவாளர் என்று தவறாக நினைத்து வடசென்னை வடக்கு மாவட்டம் தொழிற்சங்க துணைச் செயலாளர் விஜயகுமார் மீது அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விஜயகுமார் தெரிவித்ததாவது, வடசென்னை மாவட்ட செயலாளரான ராஜேஷ் முன்விரோதம் காரணமாக, பெங்களூர் புகழேந்திக்கு ஆதரவாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருப்பதாக கட்சியினர் மத்தியில் தவறான தகவலை பரப்பியதாகவும், இதனை நம்பிய பிற தொண்டர்கள் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறினார்.
மேலும், தன் மீது தாக்குதல் நடத்தியதற்கு தூண்டுகோலாக இருந்த வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது காவல் நிலையத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரியும், கட்சித் தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்க இருப்பதாக விஜயகுமார் தெரிவித்தார்.
போட்டியின்றி தேர்வு
அதிமுக ஐம்பது ஆண்டு கால வரலாற்றில் ஆறு பேர் பொதுசெயலாளர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டனர். மறைந்த முதலமைச்சர் எம்.ஜீ ராமசந்திரன், நெடுஞ்செழியன், பா உ.சண்முகம் ராகவானந்தம், ஜெயலலிதா ஆகிய ஐவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டனர். சசிகலா ஆறாவது பொதுசெயலாளர் ஆனார். அவரது நியமனம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றபட்டது.
தற்போது ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் போட்டியின்றி ஒருங்கிணைபாளர்- இணைஒருங்கிணைபாளராக தேர்ந்தெடுக்கபடுகிறார்கள்.
இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு