சென்னை: இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியான செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி, அதனை கலைஞர் நூலகமாக மாற்ற திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களையும் எதிர்கால தலைமறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் பேணிப் பாதுகாப்பது ஒரு நல்லரசின் கடமையாகும்.
அந்த வகையில், பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய 'கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லம்' அரசால் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி, அதனை கலைஞர் நூலகமாக மாற்ற நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.