தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 1, 2021, 8:57 AM IST

ETV Bharat / state

எம்ஜிஆரை நம்பிக்கை துரோகி என்று கூறுவதா? - அதிமுக கண்டனம்

கருணாநிதியை முதல்வராக்கிய எம்ஜிஆரை நம்பிக்கை துரோகி என கூறுவதா என்று திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

துரைமுருகன்  எம்ஜிஆரை நம்பிக்கை துரோகி என்ற துரைமுருகன்  துரைமுருகன்  திமுக  அதிமுக  துரைமுருகனுக்கு அதிமுக கண்டனம்  admk condemn  admk condemn duraimurugan  admk condemn duraimurugan for saying mgr as betrayer
அதிமுக

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த செப்டம்பர் 28 அன்று திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர், 'பாரத் ரத்ன' எம்.ஜி.ஆர். அவர்களை நம்பிக்கை துரோகி என்று கூறி இருப்பது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

எம்ஜிஆரை ஒரு வரலாறு

வரலாற்றுக்கு சொந்தமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். ஆனால், வரலாறே ஒரு சிலரைத் தான் தனக்கு சொந்தமாக்கி கொண்டது. அந்த ஒரு சிலரில் ஒருவர் தான், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

’என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்தில் வைத்துக்கொண்டேன். அதுதான் எம்.ஜி.ஆர்.’ என்றும் ‘நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்’ என்றும் பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டு, தன்னுடைய திரைப்படங்களின் பாடல்கள் வாயிலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு வித்திட்ட புரட்சித் தலைவரைப் பார்த்து, அண்ணாவின் மறைவிற்கு பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், கருணாநிதியை முதலமைச்சராக்கிய எம்.ஜி.ஆரை பார்த்து நம்பிக்கை துரோகி என்று துரைமுருகன் சொல்வது கண்டனத்துக்கு உரியது.

நம்பிக்கை துரோகம்

திமுக கடந்து வந்த பாதையையும், தான் கடந்து வந்த பாதையையும் மறந்துவிட்டு துரைமுருகன் பேசுகிறாரா அல்லது மறைத்துவிட்டு பேசுகிறாரா என்று தெரியவில்லை. நம்பிக்கை துரோகம் என்று துரைமுருகன் கூறியவுடன் நினைவுக்கு வருவது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது என்ற பழமொழிதான். உணவு தந்த வீட்டிற்கு கேடு தரும் செயலை நினையாமல் இருக்க வேண்டும். அவருக்கே கேடு செய்வதுதான் நம்பிக்கை துரோகம்.

திமுக செய்த துரோகம்

திமுக என்ற கட்சி ஆட்சிப் பீடத்தில் அமருவதற்கும் கருணாநிதி முதலமைச்சர் ஆனதற்கும் காரணமான எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு நீக்கிய கருணாநிதிதான் நம்பிக்கை துரோகி என்றும், காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கினை சத்தம் போடாமல் திரும்பப் பெற்றது, தமிழ்நாட்டு மக்களுக்கு கருணாநிதி செய்த மிகப் பெரிய துரோகம்.

இலங்கையில் போர் நின்றுவிட்டது என்று கூறி இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட காரணமாக இருந்தது, இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த துரோகம். நீட் தேர்வுக்கு வித்திட்டது ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு செய்த துரோகம்.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு தடை விதித்த ஒன்றிய அரசிற்கு துணையாக இருந்தது, பாரம்பரிய விளையாட்டு வீரர்களுக்கு செய்த துரோகம். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்ற கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்தது, வணிகர்களுக்கு செய்த துரோகம்.

குடும்பமே கழகம்

‘கழகமே குடும்பம்’ என்றிருந்த திமுகவை, ‘குடும்பமே கழகம்’ என்று மாற்றியது திமுகவினருக்கு செய்த மிகப் பெரிய துரோகம். இப்படி, எண்ணற்ற துரோகங்களைச் செய்தவர் தான் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. அவரது மறைவிற்குப் பின் அந்தப் பணியை துரைமுருகன் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான், தன்னை வளர்த்து ஆளாக்கிய எம்ஜிஆரையே நம்பிக்கைத் துரோகி என்று சொல்லி இருக்கிறார்.

இழிவுபடுத்தும் வகையில் பேசும் துரைமுருகனின் இந்தப் பேச்சு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. துரோகம் கத்தியைப் போன்றது, மற்றவர்களைக் குத்தும்போது சுகமாக இருக்கும். நம்மை திரும்பிக் குத்தும்போது கொடூரமாக இருக்கும் என்பதை துரைமுருகன் உணர்ந்து செயல்பட வேண்டும்.

எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய் நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை என்ற திருவள்ளுவரின் வாக்கினை மனதில் நிலை நிறுத்தி, இனி வரும் காலங்களில் நாவடக்கத்துடன் பேச வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கை முடித்துவைத்த நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details