சென்னை:தேர்தல் பரப்புரையின் போது, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியையும், அவரது தாயாரையும் தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இதனால் அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக புகாரளித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல், அ.ராசா தேர்தல் பரப்புரைகளில் கலந்துகொள்ள தடை விதிக்க வலியுறுத்தியும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறும் தமிழ்நாடு தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், " நான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவும், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராகவும் உள்ளேன். நேற்று முன்தினம் திமுக சார்பில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் எழிலனை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரையின்போது, திமுக நட்சத்திர பேச்சாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக பேசியுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டத்திற்கு உட்படுவதும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்திற்கு உட்படும் வகையிலும் முதலமைச்சரை மிகவும் கண்ணியமற்ற முறையிலும், கேவலமாகவும், தனிநபர் விமர்சனத்தைத் தாண்டி திமுக தலைவரை உயர்வாகவும், எடப்பாடி பழனிசாமியை தரம்தாழ்த்தியும் மிகக் குறைவாக விமர்சித்ததுடன் மட்டுமின்றி, மறைந்த அவரது தாயாரையும் கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இவர் பல தேர்தல் பரப்புரைகளில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த இழிசெயலை கண்டிக்கும் வகையில் மாநிலமெங்கும் தன்னெழுச்சியாக, பெண்ணிய அமைப்புகளும், சமூக நல அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. இது மேலும் பரவாமலும், சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு முன்பாக ஆ. ராசா மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, தலைமைத் தேர்தல் அலுவலர் அவதூறு பரப்புரை மேற்கொண்டு வரும் ஆ. ராசா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும், தேர்தல் நடத்தை விதி மீறலின்படியும், இனி தொடர்ந்து தேர்தல் பரப்புரை செய்வதற்கு தடை விதித்து, இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.