நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து அரசியல் கட்சிகளுக்கிடையேயான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை ஆளும் அதிமுக கட்சியுடன், மத்தியில் ஆளும் பாஜக, தேமுதிக, பாமக, தமாக கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. அதேபோல் எதிர்க்கட்சியான திமுகவுடன், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளை கை கோர்த்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு, காலியாக இருக்கும் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 18 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து இடைத்தேர்தல் நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை (மார்ச் 17) நேர்காணல் நடைபெறவுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை 9.30 மணியளவில் நடைபெறும் நேர்காணலில், விருப்ப மனு அளித்தவர்கள் கலந்து கொள்ளுமாறு அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.