தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையில் பணியாற்ற வேண்டும்”

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையில் பணியாற்ற வேண்டும் என அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

Admk cadres work for sure victory
Admk cadres work for sure victory

By

Published : Oct 5, 2021, 5:18 AM IST

சென்னை:கழக நிர்வாகிகளுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் வாக்காளப் பெருமக்களுக்கும் அன்பு வேண்டுகோள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், அரசின் திட்டங்களையும், அரசின் தவறுகளையும் அடித்தட்டு மக்கள் வரை ஆணித்தரமாக கொண்டு சேர்க்கக்கூடிய அமைப்பு உள்ளாட்சி அமைப்பு. அந்த வகையில், 9 மாவட்டங்களுக்கு முழுமையாக ஊரக உள்ளாட்சித் தேர்தல்களும், 28 வருவாய் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்களும், வருகின்ற 6.10.2021 மற்றும் 9.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் மக்கள் பேரியக்கமான, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் என்பது புதிதல்ல, கடந்த காலங்களில் தேர்தல்களை நாம் நேர்மையாகவும், நியாயமான முறையிலும் சந்தித்து மக்களின் ஏகோபித்த பேராதரவைப் பெற்று மக்கள் பணியாற்றி இருக்கிறோம்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், மக்களின் ஏகோபித்த பேராதரவை கழகம் பெற்றிருந்த போதிலும், தொடர்ந்து மக்களை நம்பாமல் தன்னுடைய தில்லுமுல்லு வேலைகளை மட்டுமே பிரதானமாகக் கருதி தேர்தலை சந்தித்த திமுக, எந்தக் காலத்திலும் அவர்களால் நிறைவேற்ற இயலாத, உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை மக்களிடத்திலே அளித்து, அதை மக்கள் முழுவதுமாக நம்பக்கூடிய சூழ்நிலையையும் உருவாக்கி, கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் இதே போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க காத்திருக்கக்கூடிய சாயம் வெளுத்த நரியாகவும், காலுடைந்த பரியாகவும் இருக்கக்கூடிய திமுக முயற்சி செய்யும். ஆனால், மக்கள் எப்போதும் போல உண்மையின் பக்கம் இருக்கக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உங்களுடைய பேராதரவினை நல்கிட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்போடு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் பேரியக்கம் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது, ஊரக உள்ளாட்சித் தேர்தலை இரண்டு முறையும், சட்டமன்றத் தேர்தலை ஒரு முறையும், நாடாளுமன்றத் தேர்தலை இரு முறையும் , ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் அமைதியான முறையிலே, வாக்காளர்களை மட்டுமே நம்பி நடத்தி முடித்திருக்கிறோம். ஆனால், வன்முறைக்கும், அராஜகத்திற்கும் பேர்போன திமுக, வெறும் 9 மாவட்டங்களுக்கு மட்டும் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த முடிவெடுத்திருக்கிறது. இதை எதிர்த்து, நம் கழகம் உயர்நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து அதன்மூலம் கடுமையான உத்தரவுகளை திமுக அரசிற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இருந்தாலும், சட்டமன்றத்தையும், நீதிமன்றத்தையும், மன்றத்தையும் மதிக்காத திமுக, இந்த உத்தரவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாது.

மக்கள் கடந்த பத்து ஆண்டுகளில் மறைந்த ஜெயலலிதா அறிவித்த அனைத்து மக்கள் நலன் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளை கழக அரசு நிறைவேற்றி இருக்கிறது. உள்ளாட்சியில் ஒரு நல்லாட்சி கழக அரசால் மட்டுமே தர முடியும். இந்தத் தேர்தலிலும் அதே பழைய பாணியையே திமுக கையாண்டு, பொய்யைச் சொல்லி கடந்த நான்கு மாதத்தில் மக்களிடத்தில் முழுமையாக தன்னுடைய செல்வாக்கை இழந்த திமுக, உள்ளாட்சிப் பதவிகளை கைப்பற்றுவதற்கு அரசு இயந்திரத்தையும் அரசு அதிகாரிகளையும் தன்னுடைய கைப்பாவைகளாக மாற்றி வெற்றிபெற முயலும். எனவே, கழக உடன்பிறப்புகள் மற்ற தேர்தலைப் போல இந்தத் தேர்தலை எண்ணாமல், கூடுதல் விழிப்புடனும், கண் துஞ்சாமல், இமை மூடாமல் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக மக்களிடம் சென்று கழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, மக்களின் செல்வாக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தான் இருக்கின்றது என்பதை பறைசாற்றும் விதமாக கழக உடன்பிறப்புகளின் தேர்தல் பணிகள் அமைய வேண்டும் என்றும், மேலும், நம் முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

கழக உடன்பிறப்புகள், வாக்குப் பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும், வாக்குப் பதிவு நிறைவுபெற்று அதனை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருந்திடல் வேண்டும் என்றும், கேட்டுக் கொள்கிறோம்.

எங்களின் உயிரினும் மேலான வாக்காளப் பெருமக்களே, வருகின்ற 6.10.2021 மற்றும் 9.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள, ஊரக உள்ளாட்சி மற்றும் தற்செயல் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் . கண்ட வெற்றிச் சின்னமாம் " இரட்டை இலை சின்னத்திலும், 3 அதே போல் , கிராம ஊராட்சித் தலைவர் , கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு , அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களிலும் ; அதே போல் , கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களிலும், உங்களது பொன்னான வாக்குகளை அளித்து , கடந்த நான்கு மாதங்களில் மக்கள் செல்வாக்கை முழுவதுமாக இழந்த விடியா அரசுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் உங்களுடைய பங்களிப்பும் , வாக்களிப்பும் இருக்க வேண்டும் என கழக உடன்பிறப்புகளையும், வாக்காளப் பெருமக்களையும் மீண்டும் ஒருமுறை உள்ளன்போடு வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்கிறோம் .

திமுக - வினர் தில்லுமுல்லு செய்வதிலும் , வன்முறையில் ஈடுபடுவதிலும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும் . இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம் . ஆகவே , வாக்கு எண்ணும் மையங்களில் திமுக - வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை விழிப்போடு கண்காணித்து , ஏதேனும் தவறுகள் நடக்கும்பட்சத்தில் அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும் . கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியில் வர வேண்டும் . கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள Chief Agent- களும் , தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் , வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும் . கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும் , மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும் , அனைவரும் விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள் . இது , ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details