திண்டுக்கல் மாவட்டம் அவிலிப்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கக்கோரி வழக்கு - Dindigul lawyer Suryamoorthy's petition
17:52 September 21
திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர், அதிமுக புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அந்த மனுவில், "அதிமுக பொதுச்செயலாளராக பதவி வகித்துவந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டது. கட்சியின் சட்ட திட்டத்தின்படி, அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாற்றாகக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச்செயலாளர் பதவி உள்பட எந்த நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்தாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனப் பதவிகளை உருவாக்கி அதிமுகவினர் கட்சியை நடத்திவருகின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அதில், கட்சியில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சிக்கலும் தற்போது ஏற்பட்டிருப்பது கட்சி உறுப்பினர்களிடையே வெறுப்புணர்வை உண்டாக்கியுள்ளது. கட்சிக்கு இரட்டை தலைமையை உறுப்பினர்கள் விரும்பவில்லை என்பதால், புதிய பொதுச்செயலாளர் பதவி உள்பட நிர்வாகிகளுக்கான உள்கட்சி தேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து, உள்கட்சி தேர்தல் நடத்தும் வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சியின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.