சென்னை: அதிமுக சார்பில் 234 தொகுதிகளில் சட்டப்பேரவை வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் கட்சியின் தலைமைக் கழகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தேதியான பிப்., 24ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மார்ச் 5ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விருப்ப மனு படிவங்களைப் பெற்று கொள்ளலாம் என்று, இன்று அறிவிக்கப்பட்டது. இது அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாமக, தேமுதிக, தமாகா, பாஜக மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் , தமிழ்நாட்டின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக தங்களின் தேர்தல் பரப்புரையைத் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் துரிதப்படுத்தி விருப்ப மனுக்களைப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த இரு கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடுகளை இன்னும் முறையாக இறுதி செய்யாத நிலையில் விருப்ப மனுக்களை பெறுவதற்கான அறிவிப்பை திடீரென வெளியிட்டுள்ளது.
அதிமுக-பாமக தொகுதி பங்கீட்டிற்கான பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் விருப்ப மனு தேதியை அதிமுக அறிவித்துள்ளது. எனவே, அதிமுகவின் இந்த திடீர் அறிவிப்பு, பாமகவுக்கும் ஒரு வியப்பை கொடுத்திருக்கிறது.
மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிக, அதிமுகதான் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்து காத்து இருக்கிறார். பிரதமர் நேற்று சென்னை வந்து சென்ற நிலையில் விருப்ப மனு பெறும் அறிவித்து, அதிமுக தேர்தல் பணிகளை வேகப்படுத்தி உள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் இது குறித்து நம்மிடம் பேசுகையில், "அதிமுகவின் இந்த நிலைப்பாடு தமிழ்நாடு அரசியலில் புதிதல்ல. அதிமுக அதன் கூட்டணி கட்சிகளைத் தவிர்க்கிறது என்று சொல்லவில்லை. வெகு விரைவில் பாஜக தொகுதி பங்கீட்டிற்கான பேச்சு வார்த்தையை அதிமுகவுடன் தொடங்கும்" என்றார்.