சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள், பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்தில் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்த அதிமுக, மாவட்டங்களைப் பிரித்து கூடுதலாக பொறுப்பாளர்களை அறிவித்தது. கடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுக்கு ஏராளமான ஆலோசனைகள், வழிமுறைகள் வழங்கப்பட்டன.
வரப்போகும் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும், பெண்களுக்கான வாக்குச்சாவடிகளில் பெண் முகவர்களை நியமித்தல், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பூத் கமிட்டிகள் அமைத்தல் போன்றவை குறித்தும் மாவட்டச் செயலாளர்களுக்கு அப்போது அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி அதனடிப்படையில், அவர்கள் இதுவரை மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்கள், தரப்பட்ட பணிகள் தொடர்பான விளக்கங்கள் குறித்து நிர்வாகிகளோடு கலந்துரையாடப்பட்டது. அதிமுக அரசின் சாதனைகளை முன்வைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் அரசு நலத்திட்ட உதவிகளை மக்களிடையே வேகமாக கொண்டுசென்று விளக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாலை 5 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணிவரை நீடித்த கூட்டத்தில், 73 மாவட்டச் செயலாளர்களோடு ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டனர்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால சாதனைகளை மக்கள் முன் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியை எப்படி எல்லாம் திட்டமிட்டுச் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 10 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு மக்களுக்குச் செய்துவரும் நலத் திட்டங்கள் என்னென்ன என்பதை மக்கள் முன் பட்டியலிட்டு இந்தத் தேர்தலைச் சந்திக்கவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.