அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 49 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு 2021 சட்டப்பேர்வை தேர்தல் முடிவடைந்து, முடிவுகள் வரும் சமயம் அதிமுகவிற்கு பொன் விழாவாக இருக்கும். அது வெற்றி முகத்துடன் இருக்குமா? அல்லது தோல்வி முகத்துடன் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேரறிஞர் அண்ணாதுரையால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில், அவரது மறைவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர், கலைஞர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து 1972-ஆம் ஆண்டில் உதயமானது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். 1972ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரச்னை முதல் தற்போது அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் பிரச்னை வரை அதிமுக பார்க்காத தடைகள் இல்லை. அனைத்தையும் உடைத்து இன்று ஆட்சியில் உள்ளது.
குறிப்பாக எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் தனி ஒரு பெண்ணாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். மேலும் அவரது மறைவுக்குப்பின்னர் அதிமுகவில் நடந்தது அனைவரும் அறிந்தது. சசிகலாவின் தாக்கம், பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், மக்கள் அறியாத ஒருவர் திடீரன்று தமிழ்நாட்டில் முதலமைச்சர் என்று 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசியல் களம் அதிர்ந்தது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு அதிமுக கட்சி இருக்காது என்று பலர் கருத்துகள் தெரிவித்து வந்தனர். ஆனால், அதன் பிறகு இரண்டு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, தற்போது வரை வெற்றிகரமாக ஆட்சியில் உள்ளது. அண்மையில் நடைபெற்ற முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சையையும் அதிமுக சமாளித்து கட்சியை வழி நடத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று(அக்.17) 49ஆவது தொடக்க நாளை அதிமுகவினர் கொண்டாடி வந்த நிலையில், வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தல் அதிமுகவிற்கு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதைப் பற்றி பேசிய அரசியல் விமர்சகர் பேராசிரியர் இரா. திருநாவுக்கரசு, 'வருகின்ற 2021ஆம் ஆண்டு தேர்தல் அதிமுகவிற்கு நிச்சயமாக கடினமான தேர்தலாக இருக்கும். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பரிதாபமான தோல்வியை அடைந்தனர். திமுக தலைவர் கருணாநிதி மறைந்தாலும் அமைப்பு ரீதியாக திமுக பலமாக உள்ளது. அது அதிமுகவிற்கு தற்போது இல்லை. அதிமுக கட்சி 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால், இயலப்பாக எதிர்ப்பு அலை மக்கள் மத்தியில் வீசும், வீசுகின்றது.
ஆனால், அதை எவ்வளவு வலுவாக அமைப்பு ரீதியாக எதிர்கொள்கிறது அதிமுக, அந்த அதிருப்தி நிர்வாக ரீதியில் ஆனதா அல்லது கொள்கை ரீதியில் ஆனதா என்பது தான் கேள்வி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி என்பது கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக அரசுக்கு எதிரான வாக்குகளே. அதிமுக தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்தால் அதிமுகவிற்கு கிடைக்கக்கூடிய வாக்குகள்கூட விலகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிர்ப்பு உள்ளது. சில பிரபலங்கள் பாஜகவில் சேருவதால், அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். பாஜக, அதிமுக கூட்டணியால் அதிமுகவிற்குப் பாதிப்பு உள்ளது.
அரசியல் விமர்சகர் பேராசிரியர் இரா. திருநாவுக்கரசுடன் ஓர் உரையாடல் தொடர்ந்து பேசிய அவர், 'கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு விழுக்காட்டைவிட நிச்சயமாக அதிமுக இம்முறை அதிக வாக்குகள் பெறுவார்கள். அதிமுகவிற்கு என்று வாக்கு வங்கி உள்ளது. அதிமுக இன்னும் அதல பாதாளத்திற்குச் செல்லவில்லை என்றே நான் நினைக்கின்றேன். அதிமுகவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தினால், வரும் தேர்தல் அவர்களுக்கானதாக இருக்க வாய்ப்புள்ளது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்களால் கரோனா பரவும் அபாயம்?