மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 652 மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். அவர்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 5 ஆயிரத்து 455 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2 ஆயிரத்து 197 மாணவர்களும் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பிஎஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நேற்று(நவ.3) முதல் 12ஆம் தேதி வரை www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் 2 ஆயிரத்து 784 இடங்களும், இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 65 இடங்களும், ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியில் 127 இடங்களும், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் 55 இடங்களும் நிரப்பப்படவுள்ளன.