இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில், '11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் வரும் கல்வியாண்டில் ஆறு பாடங்களுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதில், ஐந்து பாடங்கள் 500 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்தது.
அதற்கேற்ப மாணவர்கள் தாங்கள் விரும்பும் 5 பாடங்களை விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி மாணவர்கள் மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களையும் கணிதம் தவிர்த்து மொழிப்பாடம், ஆங்கிலம், உயிர் அறிவியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னதாக எந்தப் பாடத்தொகுப்பினை தேர்வு செய்கின்றனர் என்பதற்கான அனுமதியைப் பெற வேண்டும். அதனை மீறி மே மற்றும் ஜூன் மாதங்களில் மாணவர் சேர்க்கையினை நடத்திவிட்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் புதிய படத்தொகுப்பிற்கு அனுமதி கேட்கக்கூடாது.