கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றதாகத் தெரிவித்தார். சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அப்போதுதான் மதிப்பெண் பட்டியலும் வெளிவரும் எனத் தெரிவித்தார்.
+2 ரிசல்ட்டுக்குப் பின் மாணவர் சேர்க்கை
அதேபோல தமிழ்நாட்டிலும் +2 தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது. எனவே தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனக் கூறினார்.
மேலும் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக நுழைவுத்தேர்வு வழியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தினால் அது செல்லாது எனவும்; அவை ஏற்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார். அவ்வாறு நடந்தால் அந்த கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.