சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ”ஓட்டுக்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை” என்று கூறியிருந்தார்.
ஆனால், இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ரவீந்திரநாத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது.